தாயை பராமரிக்காமல் வீட்டுக்குள் பூட்டி வைத்த சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்- தம்பி கைது


தாயை பராமரிக்காமல் வீட்டுக்குள் பூட்டி வைத்த சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்- தம்பி கைது
x
தினத்தந்தி 18 April 2022 1:21 AM IST (Updated: 18 April 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், பெற்ற தாயை பராமரிக்காமல் வீட்டுக்குள் பூட்டி வைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை காவேரி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் திருஞானம். தூர்தர்ஷனில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி ஞானஜோதி (வயது 72). இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

ஞானஜோதியின் மூத்த மகன் சண்முகசுந்தரம், சென்னை போலீசில் தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இளைய மகன் வெங்கடேசன், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பணிபுரிகிறார். சொத்து பிரச்சினை காரணமாக பெற்ற தாயை 2 மகன்களும் பராமரிக்காமல் ஒரு வீட்டில் வைத்து பூட்டி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

போதிய உணவு, தண்ணீர் கிடைக்காததால் எலும்பும், தோலுமாக மாறிய ஞானஜோதி வீட்டுக்குள் தரையை சுரண்டி மண்ணை தின்று உயிர் வாழ்ந்து வந்தார். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ எடுத்து, தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு அனுப்பி வைத்தார்.

அவருடைய உத்தரவின்பேரில், சமூக நலத்துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் மூதாட்டியை மீட்டனர். தற்போது அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அண்ணன்-தம்பி கைது

இதுகுறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசில் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா புகார் அளித்தார்.

இதன்பேரில், மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் பெற்ற தாயை பராமரிக்காமல் இருந்த சண்முகசுந்தரம், வெங்கடேசன் ஆகியோர் மீது தமிழ் பல்கலைக்கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர் நேற்று முன்தினம் இரவு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது தம்பி வெங்கடேசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story