பிறந்தநாளையொட்டி தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


பிறந்தநாளையொட்டி தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 17 April 2022 10:49 PM GMT (Updated: 2022-04-18T04:19:09+05:30)

தீரன் சின்னமலை பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.

சென்னை,

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவச்சிலை மற்றும் அதற்கு கீழே உருவப்படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் முத்துசாமி, ராஜகண்ணப்பன், மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, செந்தில்பாலாஜி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோரும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

ஓ.பன்னீர்செல்வம்

இதேபோல் தீரன் சின்னமலை சிலைக்கு, அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்தும், அதனைத்தொடர்ந்து உருவப்படத்துக்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

அவருடன் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, பா.பெஞ்சமின், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், செய்தி தொடர்பாளர் ஒய்.ஜவஹர் அலி, முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்தன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மாவட்ட தலைவர் சைதை மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் மாநில செயலாளர் துரை கந்தசாமி, மாவட்ட நிர்வாகிகள் சஞ்சீவி, சுதாகர், கோட்டூர் ராதாகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள், பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், கோபி உள்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

என்.ஆர்.தனபாலன் - எர்ணாவூர் நாராயணன்

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவக்குமார், செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, ராஜேஷ் உள்பட நிர்வாகிகள், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தலைவர் கே.சி.ராஜா, பொதுச்செயலாளர் அய்யனார், திருவல்லிக்கேணி தேவர் முன்னேற்ற கழக தலைவர் ஏ.கே.முருகானந்தம் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் தீரன் சின்னமலை உருவப்படம் - சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Next Story