கார் விபத்தில் பலியான தீனதயாளனின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி; முதல்-அமைச்சர் அறிவிப்பு


கார் விபத்தில் பலியான தீனதயாளனின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி; முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 April 2022 12:29 PM IST (Updated: 18 April 2022 12:29 PM IST)
t-max-icont-min-icon

மேகாலயாவில் கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளனின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.



சென்னை,



மேகாலயாவில் நடைபெற உள்ள 83வது சீனியர் தேசிய சாம்பியன்சிப் போட்டியில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான விஸ்வா தீனதயாளன் (வயது 18) மற்றும் 3 வீர‌ர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

அந்த கார் ஷாங்பங்க்லா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வீர‌ர்கள் சென்ற கார் மீது மோதியது. இதில், கார் டிரைவரும், தீனதயாளன் விஷ்வாவும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற 3 வீர‌ர்களும் ஷில்லாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தீனதயாளன் விஷ்வாவின் உடல் இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகிறது. அவரது இறப்புக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நம்பிக்கைக்குரிய, இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் மறைவு வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியை அளிக்கிறது. சாதனை புரிந்து வந்த விஸ்வா விரைவில் நம்மை விட்டு பிரிந்தது வேதனை அளிக்கிறது. 

கார் விபத்தில் உயிரிழந்த விஸ்வா தீனதயாளனின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டு குழுவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, தமிழக சட்டசபை காலை 10 மணிக்கு தொடங்கியதும் முதலில் மேகாலயா மாநிலத்தில் கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனுக்கு இரங்கல் மற்றும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவரது மறைவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா இரங்கல் தெரிவித்துள்ளார்.  அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மேகாலயாவில் கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

ஆஸ்திரியாவில் லின்ஜ் நகரில் வருகிற 27ந்தேதி நடைபெற உள்ள சர்வதேச போட்டி ஒன்றில் இந்தியா சார்பில் தீனதயாளன் பங்கேற்க இருந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.




Next Story