கணவன், மனைவியை தாக்கி 10 பவுன் நகை கொள்ளை


கணவன், மனைவியை தாக்கி  10 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 18 April 2022 2:55 PM GMT (Updated: 2022-04-18T20:25:24+05:30)

கண்டமங்கலம் அருகே கணவன், மனைவியை தாக்கிய முகமூடி கும்பலால் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

கண்டமங்கலம் அருகே கணவன், மனைவியை தாக்கிய முகமூடி கும்பலால் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வாழைத்தார் வியாபாரி
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பூஞ்சோலை குப்பம் கிராமம் ஸ்ரீராம் நகரில் வசிப்பவர் ராஜாராம் (வயது 53). புதுச்சேரியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் வாழைத்தார் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி (45). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 
இந்தநிலையில் நேற்று இரவு ராஜாராம் தனது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு எழுந்து வந்து ராஜாராம் கதவை திறந்தார். 
அப்போது  வெளியே முகமூடி அணிந்த 4 பேர் நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் சுதாரிப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் அந்த கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. பின்னர் அவரது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை கேட்டு கலையரசியை மிரட்டினர். அவர் தரமறுத்து சத்தம் போட்டார். 
கத்தியை காட்டி மிரட்டல்
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி கணவன், மனைவியை தாக்கி விட்டு பீரோவில் இருந்த 10 பவுன் நகை, 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் கலையரசிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசில் கலையரசி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்ப நாய் விக்கி வரவழைக்கப்பட்டது. 
கணவன்-மனைவியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 
கடந்த மாதமும் கைவரிசை
இதே வீட்டில் கடந்த (மார்ச்) மாதம் 18-ந்தேதி ராஜாராம் குடும்பத்தினர் கொல்லிமலை கோவிலுக்கு சென்று இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டுக்கதவை உடைத்து ரூ.1 லட்சம், 2 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நடந்த ஒரே மாதத்தில் மீண்டும் அதே தேதியில் அதேவீட்டில் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story