ரூ.106 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


ரூ.106 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 20 April 2022 10:53 PM GMT (Updated: 20 April 2022 10:53 PM GMT)

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி, திருவொற்றியூர், கொருக்குப்பேட்டையில் ரூ.106 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை,

கடந்த வடகிழக்கு பருவமழையின்போது, கொசஸ்தலையாற்றின் வெள்ளிவாயல் முதல் சடையான்குப்பம் வரை கரைஉடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மணலிபுதுநகர், தனலட்சுமி நகர், வடிவுடையம்மன் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர்சூழ்ந்து, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இப்பகுதிகளில் வெள்ளநீர் சூழாமல், நிரந்தர தீர்வு காணும் வகையில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வெள்ளிவாயல் கிராமம் அருகே கொசஸ்தலையாற்றின் வலது கரையில் சுமார் 1,000 மீட்டர் வரை அலைக்கற்களுடன் கூடிய கரை அமைக்கும் பணி மற்றும் திருவொற்றியூர் வட்டம், இடையான்சாவடி, சடையான்குப்பம், மணலிபுதுநகர் ஆகிய கிராமங்களின் வழியாக செல்லும் கொசஸ்தலையாற்றின் 4 ஆயிரம் மீட்டர் வரை கரையை பலப்படுத்துல் மற்றும் இடையான்சாவடி அருகே கொசஸ்தலையாற்றின் இடதுகரையில் 2 ஆயிரம் மீட்டர் வரை கரையினை ரூ.15 கோடியில் மறுசீரமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி, அங்கு முன்னேற்பாடு பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டு, ஆய்வுசெய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மு.க.ஸ்டாலின் ஆய்வு

கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் ரூ.3 ஆயிரத்து 220 கோடி மதிப்பீட்டில், 769 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மணலி மண்டலத்திற்குட்பட்ட வார்டு 16-ல் உள்ள வடிவுடையம்மன் நகர் பகுதியில் ரூ.51 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் 15.41 கி.மீ. நீளத்திற்கு நடைபெற்றுவரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், 60 அடி சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதியில், ரூ.43 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் 10.45 கி.மீ. நீளத்திற்கு நடைபெற்றுவரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும் முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு 4-ல் உள்ள மணலி விரைவு நெடுஞ்சாலையில் ரூ.7 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில், 0.81 கி.மீ. நீளத்திற்கு நடைபெற்றுவரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மழைநீர் வடிகால் கார்கில் நகர் குளத்தினை சென்றடையும். இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்திட முதல்-அமைச்சர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

30 லட்சம் மக்களுக்கு பயன்

கடந்த வடகிழக்கு பருவமழையின்போது கொருக்குப்பேட்டை, கண்ணன் தெரு, தீயப்பா தெரு, ஏகாம்பரம் தெருவில் மழைநீர் தேங்கி, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வரும் மழைகாலத்தில் மழைநீர் தேக்கத்தை தவிர்க்கும் பொருட்டு கண்ணன் தெரு, தீயப்பா தெரு, ஏகாம்பரம் தெருவில், ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில், 1.23 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். மேற்கண்ட பணிகள் அனைத்தும் நிறைவுபெறும்போது, இப்பகுதிகளில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டு, கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் வசிக்கும் 30 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், ஜே.ஜே.எபினேசர், துரை சந்திரசேகர், துணைமேயர் மு.மகேஷ்குமார், அரசு முதன்மைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story