உள்ளாடைக்குள் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தல் - துபாயில் இருந்து சென்னை வந்த இருவர் கைது


உள்ளாடைக்குள் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தல் - துபாயில் இருந்து சென்னை வந்த இருவர் கைது
x
தினத்தந்தி 21 April 2022 8:04 AM IST (Updated: 21 April 2022 8:04 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தி வந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,
 
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும் விதவிதமாக தங்கம் கடத்தி வருவது நீடிக்கிறது.

நாட்டில் தங்கம் கடத்தும் மிகப்பெரிய மையமாக சென்னை விமானநிலையம் உருவாகி வருகிறது. இதையடுத்து, தங்க கடத்தல் சம்பவங்களை தடுக்க கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், துபாயில் இருந்து நேற்று சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாக்கா அதிகாரிகள் நேற்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னை ஏழு கிணறு பகுதியை சேர்ந்த அபுபக்கர், சிவகங்கையை சேர்ந்த முகமது மில்கான் ஆகிய 2 பேரும் உள்ளாடைக்குள் மறைத்து தங்க கட்டிகளை கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

2 பேரையும் கைது செய்த நிலையில் அவர்களிடமிருந்த 57.07 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 180 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story