மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்கிய கோவில் கலசம் - தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு...!
மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்கிய கோவில் கலசம் தொடர்பாக தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மாமல்லபுரம்,
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வடபகுதி மீனவர்கள் குடியிருப்பு பகுதி கடலோரத்தில் நேற்று மாலை கடல் உள்வாங்கியது. அப்போது பழங்காலத்து கோயில் கல்கலசம், தூண்கள், செங்கல்கள் ஒதுங்கி இருந்தது.
கடலில் அடித்து செல்லப்பட்ட 6 கோயில்களில் ஒன்றாக இருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதனால் இன்று காலையில் இருந்தே உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்கு சென்று கடலில் மூழ்கிய கோயிலா இது என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகிறார்கள்.
இதுகுறித்து மாமல்லபுரம் தொல்லியல்துறை அதிகாரிகள் கூறுகையில்,
7-ம் நூற்றான்டில் மாமல்லபுரத்தை ஆட்சி செய்த மன்னர் பராங்குசன் 7 கோயில்கள் கட்டியதாகவும் அதில் ஒன்று 108 திவ்யதேசங்களில் 63-வது திவ்யதேசமான ஸ்தலசயன பெருமாள் கோயில் எனவும், 6 கோயில்கள் கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த கலசங்கள், தூண்கள், செங்கல்களை பார்க்கும் போது சுற்றுச்சுவர் கட்டிடம் போன்றும் தெரிகிறது. கோவிலை பாதுகாக்க போடப்பட்ட சேதமடைந்த கற்கள் போன்றும் தெரிகிறது.
கடற்கரையில் தற்போது ஒதுங்கி இருப்பது பழங்கால கோயில்தான் என உறுதியாக இப்போது கூறமுடியாது. சென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் தொல்லியல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து இன்று அல்லது நாளை தொல்பொருள், கல்வெட்டு ஆய்வாளர்கள், சென்னை பல்கலை கழகத்தில் இருந்து கட்டிடக்கலை பேராசிரியர் கொன்ட ஆய்வுக் குழுவினர் வந்து கலசத்தையும் தூண்களையும் ஆய்வு செய்த பின்னர் இது கோயிலா அல்லது சுற்றுச்சுவரா என்பது தெரியவரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story