4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டமன்றப் பேரவையில், விதி 110-ன்கீழ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 110 விதியின் மூலமாக ஓர் அறிக்கையினை தங்களின் அனுமதியோடு நான் இந்த அவையின் முன்வைக்க விரும்புகிறேன்.
மனித சக்தி என்பது உடல் வலிமையும், உள்ளத்தின் வலிமையும் இணைந்தது. இரண்டு ஆற்றலும் ஒருசேர இருக்கும் மனிதர்களால்தான் அனைத்துத் துறைகளிலும் வெற்றியாளர்களாக மாற முடியும். அந்த வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் சார்பிலான அறிவிப்புகளை இந்த மாமன்றத்திற்குத் தெரிவிக்க நான் விரும்புகிறேன்.
ஒரு சமுதாயத்தின் வலிமை, அச்சமுதாய மக்களுடைய மனரீதியான நலத்தையும், உடல்ரீதியான வலிமையையும் பொறுத்துள்ளது. அறிவு சக்தியைப் போன்றே, உடல் வலிமையும் ஒரு சொத்து. அத்தகைய உடல் வலிமையை அடைவதற்குப் பல்வேறு பயிற்சிகள் இருந்தாலும், விளையாட்டு என்பது அதில் மிகமிக முக்கியமானது.
விளையாட்டு என்பது உடலினை உறுதி செய்கிறது; உடலினைத் துடிப்போடு வைத்திருக்கிறது; மனதுக்கும் புத்துணர்ச்சியைத் தருகிறது. அதேபோல், நேர்மையையும், ஒழுக்கத்தையும் கற்றுத் தருகிறது; வெற்றியோ, தோல்வியோ இரண்டும் ஒன்றுதான் என்ற மனப்பக்குவத்தையும் விளையாட்டு உருவாக்குகிறது; குழுவாக இணைந்து செயல்பட வேண்டுமென்ற கூட்டு மனப்பான்மையை உருவாக்குகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு அரசால் அண்மைக்காலமாக விளையாட்டுத் துறைக்கு ஏராளமான திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை மாணவர்களும், இளைஞர்களும் சீரிய முறையில் ஒருங்கிணைந்து பயன்படுத்திக் கொண்டால், தமிழ்நாட்டின் இளைய ஆற்றல் எழுச்சி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தமிழ்நாடு பல ஆண்டுகளாக குழுப் போட்டிகளிலும், தனித் திறன் போட்டிகளிலும் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் முன்னிலை வகித்து வருகிறது. அரசால் ஏற்படுத்தப்பட்ட விளையாட்டுக் கட்டமைப்பு, பயிற்சி வசதிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படக்கூடிய உயரிய ஊக்கத் தொகை ஆகியவைதான் அதன் அடிப்படைக் காரணங்கள்.
பன்னாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்கள் வெல்வதை ஊக்குவிக்கக்கூடிய வகையில், தமிழ்நாடு அரசு ரூபாய் 3 கோடி முதல் பல்வேறு வகையான ஊக்க உதவித் தொகைகளைத் தொடர்ந்து வழங்கி, இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி வாகை சூட ஏதுவாக, பல்வேறு விளையாட்டுகளுக்காக உலகத் தரத்திலான விளையாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்த சென்னைக்கு அருகில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாட்டை சார்ந்த வீரர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி வாகை சூடுவார்கள்.
ஓலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த தமிழ்நாட்டின் நான்கு மண்டங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஓலிம்பிக் அகாடமிகள் அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் விளையாட்டுப் பயிற்சிகள், அதற்கான வசதிகள் ஏற்படுத்த நினைக்கிறோம். அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும், தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்பட உள்ளன. இதன்மூலம், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்த கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வாழக்கூடிய இளைஞர்கள் பலன் பெற வழிவகை செய்யப்பட உள்ளது.
தமிழக விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு வழிகாட்ட ஒரு முயற்சியைத் தொடங்கவிருக்கிறோம். “ஒலிம்பிக் தங்கம் தேடுதல்” என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story