திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே மீன்பிடித் திருவிழா...!
திண்டுக்கல் அருகே ஒற்றுமையை வளர்க்கும் வகையில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
குள்ளனம்பட்டி,
திண்டுக்கல் சாணார்பட்டி அருகே உள்ளது மணியக்காரன்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சாதி மத பேதமின்றி மக்களை இணைக்கும் வகையில் மீன்பிடி திருவிழா பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது.
வறட்சி காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இந்த விழா தடைபட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் இப்பகுதியில் உள்ள ஊர் குளத்தில் தண்ணீர் நிறைந்தது. தற்போது தண்ணீர் குறைந்ததை அடுத்து இன்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.
குளக்கரையில் அமைந்துள்ள கன்னிமர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய பின்னர் ஊர் நாட்டாமை வெள்ளை துண்டை வீசி மீன் திருவிழாவை தொடங்கி வைத்தார். அப்போது கரைகளில் வலைகளுடன் நின்று இருந்த ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் இளைஞர்கள் தண்ணீருக்குள் இறங்கி மீன்களை வலை போட்டு பிடித்தனர்.
இந்த மீன்பிடி திருவிழாவில் பெரியகோட்டை, புகையிலைப்பட்டி, ராஜக்காபட்டி, சாணார்பட்டி, பில்லமநாயக்கன்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
அப்போது குளத்தில் தேளி விரால் ஜிலேபி, ரோகு, கட்லா உள்ளிட்ட பல வகையான மீன்களை பிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story