1.29 கோடி தடுப்பூசிகள் செப்டம்பர் மாதத்தில் காலாவதியாகிறது மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்


1.29 கோடி தடுப்பூசிகள் செப்டம்பர் மாதத்தில் காலாவதியாகிறது மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
x
தினத்தந்தி 21 April 2022 9:20 PM GMT (Updated: 21 April 2022 9:20 PM GMT)

1.29 கோடி தடுப்பூசிகள் செப்டம்பர் மாதத்தில் காலாவதியாகிற நிலையில் விரைவில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு, கோர்பேவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் பொதுமக்களிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் இருந்த நிலையில், நாளடைவில் தமிழக அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

தினசரி 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு மேலும் தீவிரப்படுத்தியது.

வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி, அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் தற்போது தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 92 சதவீதத்தை கடந்துள்ளது.

செப்டம்பர் மாதம் காலாவதி

கொரோனா 2-ம் அலையின் போது, தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டினர். இந்தநிலையில், தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்த காரணத்தால், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. தடுப்பூசி முகாம்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால், மெகா தடுப்பூசி முகாமும் நிறுத்தப்பட்டது.

மேலும், தினசரி 5 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை என குறைந்த அளவிலேயே தடுப்பூசிகளும் செலுத்தப்படுகின்றன. தற்போது தமிழகத்தில் 1.29 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும், இந்த தடுப்பூசிகள் செப்டம்பர் மாதத்தில் காலாவதி ஆவதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இன்னும் தமிழகத்தில் 54.71 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 1.4 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.

வீணாவதை தடுக்க வேண்டும்

இந்தநிலையில், கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகளும் இன்னும் 5 மாதத்தில் காலாவதியாகும் சூழ்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், விரைவில் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகள் வீணாவதை தடுக்க முடியும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story