796 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படவில்லை: மத்திய தொகுப்பில் இருந்து வராததால் 41 இடங்களில் மின்தடை


796 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படவில்லை: மத்திய தொகுப்பில் இருந்து வராததால் 41 இடங்களில் மின்தடை
x
தினத்தந்தி 23 April 2022 12:26 AM IST (Updated: 23 April 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

மத்திய தொகுப்பில் இருந்து கடந்த 2 நாட்களாக 796 மெகாவாட் மின்சாரம் வராததாலேயே 41 இடங்களில் மின்தடை ஏற்பட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர நுகர்வோர் மின் சேவை மையம் மின்னகம், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் சென்னை மின் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய தொகுப்பில் இருந்து

கோடை காலத்தில் ஏற்படும் மின் பற்றாக்குறையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஏற்கனவே முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கென 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு தரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் கடந்த2 நாட்களாக வழங்கப்படவில்லை.

இதன் காரணமாகவே 41 இடங்களில் மட்டும் மின்தடை ஏற்பட்டது. கடந்தகால அ.தி.மு.க. ஆட்சியின் போதும் இதுபோன்ற மின்வெட்டு 68 முறை நடைபெற்றுள்ளது. இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சீரான மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மின்மிகை மாநிலம்

மத்திய அரசு தினசரி வழங்கவேண்டிய நிலக்கரியையும் போதிய அளவு வழங்கவில்லை. இதனால் தமிழகத்துக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த நிலக்கரி பெறப்படும். குஜராத், மராட்டியம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தொழிற்சாலைகளுக்கும் மின்வெட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், எங்கள் அரசின் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் அதுபோன்ற சூழல் ஏற்படவில்லை. தமிழகத்துக்கு தேவையான மின் உற்பத்தியை நாமே உற்பத்தி செய்யும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 5 சதவீத மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகாலம் முடிவடையும்போது கண்டிப்பாக தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story