தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் வருகிற 8-ந் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்


தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் வருகிற 8-ந் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 23 April 2022 4:50 AM IST (Updated: 23 April 2022 4:50 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அடுத்த மாதம் 8-ந்தேதி ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது எனவும், தடுப்பூசி செலுத்தாதவர்களை வீடு தேடி சென்று அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று மாமன்ற உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் நடந்தது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்று பரவல் இந்தியா முழுவதும் அதிகரித்து கொண்டிருக்கிறது. டெல்லி, மராட்டியம், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் தினசரி நூற்றுக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சம் நிலவிக்கொண்டிருக்கிறது. சிங்கப்பூர், மலேசியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் தினசரி லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வடமாநிலத்தவர்கள்

இந்த நிலையில், சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று (நேற்று முன்தினம்) 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை 30 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் அங்கேயே தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்தவர்கள்.

எனவே, வடமாநிலங்களில் இருந்து மொத்தமாக தமிழகம் வரும் தொழிலாளர்கள் குறித்த தகவலை, அவர்களை அழைத்து வரும் நிறுவனத்தினர், அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இலவசமாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படும். வடமாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அங்கிருந்து வருபவர்கள் மூலம் தமிழகத்தில் தொற்று அதிகரித்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டுதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

சிறப்பு மெகா முகாம்

தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 92.4 சதவீதத்தினரும், 77.69 சதவீதத்தினர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். இருந்தாலும், இன்னும் 54 லட்சத்து 32 ஆயிரத்து 674 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 271 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர்.

அந்தவகையில் தடுப்பூசி செலுத்தாத இந்த 2 கோடி பேரின் விவரங்களை சேகரித்து, அவர்களை இலக்கு வைத்து அடுத்த மாதம் 8-ந்தேதி ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.

வீடு தேடி சென்று அழைப்பு

அடுத்த மாதம் 1 மற்றும் 2-ந்தேதிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த மெகா தடுப்பூசி முகாம்கள் எங்கெல்லாம் நடக்கிறது என்ற விவரங்களை சுகாதாரத்துறை மாவட்ட அலுவலர்களால், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

அதுமட்டும் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை தனித்தனியே வீடு தேடி சென்று, அவர்களை சந்தித்து, தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story