“தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது” - டி.ஜி.பி. சைலேந்திர பாபு


“தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது” - டி.ஜி.பி. சைலேந்திர பாபு
x
தினத்தந்தி 24 April 2022 8:11 PM IST (Updated: 24 April 2022 8:11 PM IST)
t-max-icont-min-icon

தென் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக பழிக்குப்பழி சம்பவங்கள் நடைபெறவில்லை என டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற இடத்தில் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழாவின் பாதுகாப்பு பணிக்கு காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உள்பட காவலர்கள் பழவூர் சென்றிருந்தனர். விழா முடிந்த பின்னர் பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது தொடர்பாக ஏற்ப்பட்ட வாக்கு வாதத்தின் போது ஆறுமுகம் என்ற நபர் திடீரென காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியுள்ளார்.  

இதில் காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளரை சக காவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கத்தியால் குத்திய ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருமுறை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக ஆறுமுகம் மீது எஸ்.ஐ மார்க்கரேட் திரேஷா வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்ததாகவும், அந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு ஆறுமுகம் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.  

தற்போது நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.ஐ. மார்க்கரெட் திரேஷாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆகியோர், எஸ்.ஐ. மார்க்கரெட் திரேஷாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது முதல்-அமைச்சர் அறிவித்த 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை மார்க்கரெட் திரேஷாவிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், 8 கோடி மக்கள் வசிக்கும் மாநிலத்தில் இது போன்ற சில சம்பவங்கள் நடக்கும் என்றும், இதனால் குற்றங்களின் விகிதங்கள் அதிகரிக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு, தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது என்று தெரிவித்தார். அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் பழிக்குப் பழி கொலை சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் என்றும் கடந்த 6 மாதங்களாக அது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, தன் மீது வழக்குப்பதிவு செய்த காரணத்தால் சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு எஸ்.ஐ. மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அந்த நபர் ஏன் அவ்வாறு செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

Next Story