கஞ்சா கடத்தல் கும்பலுடன் பிரியாணி சாப்பிட்ட காவல் ஆய்வாளர் - காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்


கஞ்சா கடத்தல் கும்பலுடன் பிரியாணி சாப்பிட்ட காவல் ஆய்வாளர் - காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 24 April 2022 10:29 PM IST (Updated: 24 April 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா கடத்தல் கும்பலோடு காவலர் சீருடையில் பிரியாணி சாப்பிட்ட ஆய்வாளர் பெரியசாமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாகை,

நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், அதனை தடுப்பதற்காக தனிப்படை போலீசார் கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த ஓரிரு மாதங்களாக நாகையில் இருந்து அதிக அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், கஞ்சா கடத்திய நபர்கள் பலரை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து கிலோ கணக்கில் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். 

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், நாகப்பட்டினம் துறைமுகம் அருகே உள்ள அக்கரைப்பேட்டையில் இருந்து படகு மூலமாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சோதனை நடத்திய போலீசார், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மோகன் என்பவருக்குச் சொந்தமான படகில் இருந்து  400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய சிலம்பரசன், மோகன், ஜெகதீசன், நிவாஸ் மற்றும் சரவணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் கஞ்சா கடத்தல் கும்பலுடன் நாகை நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி, காவலர் சீருடையில் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல் ஆய்வாளர் பெரியசாமியை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 

Next Story