குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் இன்று முதல் இரவிலும் குளிக்க அனுமதி


குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் இன்று முதல் இரவிலும் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 24 April 2022 8:16 PM GMT (Updated: 24 April 2022 8:16 PM GMT)

குற்றாலம் அருவிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்று முதல் இரவிலும் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். இந்த சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவது வழக்கம்.

ஆனால், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, சீசன் நேரத்தில் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் கொரோனா தொற்று குறைந்ததால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதுவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக, அருவிகளில் தண்ணீர் வரத்தொடங்கியது. தற்போது கடுமையான வெயில் அடித்து வருகிறது. எனினும், ஏற்கனவே பெய்த மழையினால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் இருந்ததால் அருவிகளில் தண்ணீர் விழுந்து வருகிறது. மெயின் அருவியில் மிகவும் குறைவாகவும், ஐந்தருவியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஆனால், பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் சற்று அதிகமாக விழுகிறது.

நேற்று விடுமுறை நாள் என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். அருவிகளில் குறைவாக தண்ணீர் விழுந்தாலும் அதில் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர்.

இரவில் குளிக்க அனுமதி

இன்று (திங்கட்கிழமை) முதல் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் இரவு முழுவதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

ஆனால், பழைய குற்றாலம் அருவியில் இரவில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே அங்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story