கொரோனா பரவல் எதிரொலி: நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை


கொரோனா பரவல் எதிரொலி: நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 25 April 2022 4:52 AM IST (Updated: 25 April 2022 4:52 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

கடந்த 2 ஆண்டுகளாக உலகையே முதல் அலை, 2-வது அலை என்று உலுக்கிக்கொண்டிருந்த கொரோனா, தடுப்பூசி வந்தபிறகு வேகம் குறைந்து ஓரளவு கட்டுக்குள் வந்தது. எல்லோரும் நிம்மதி பெருமூச்சுவிட்ட நேரத்தில், இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கடந்த 1-ந் தேதி முதல் சீனாவில் உள்ள மேற்கு மாகாணங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதாவது, மீண்டும் ஒமைக்ரான் பரவல் கூடியுள்ளதால் முக்கிய நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் உயர்வு

இந்தநிலையில், சீனாவின் அண்டை நாடான இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் உயர்ந்து வருகிறது. டெல்லி, அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.

இதேபோல், தமிழகத்தில் கொரோனா பரவல் நன்றாக குறைந்து, முடியும் தருவாயில் இருந்த நேரத்தில், கடந்த 4 நாட்களாக உயர்ந்து வருகிறது. சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரூ.500 அபராதம்

இதைத்தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் முககவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் வரும் 27-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்த இருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இதற்கிடையே, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) காலை சென்னை தலைமைச்செயலகத்தில் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

கூட்டத்தில், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அதாவது, முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள், 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், பூஸ்டர் டோஸ் போட வேண்டியவர்கள் என தனித்தனியாக கண்டறிந்து தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த திட்டமிடப்பட இருக்கிறது.

மீண்டும் கட்டுப்பாடு?

மேலும், ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. அதே நேரத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

Next Story