பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் எடுத்து வந்தால் பெற்றோர் மீதும் நடவடிக்கை - வேலூர் கலெக்டர்
பள்ளி வகுப்பறைக்குள் செல்போன் எடுத்துவந்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்,
வேலூர் தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 800 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் சிலர் கடந்த 23-ந் தேதி வகுப்பறையில் உள்ள இரும்பு டெஸ்க், பெஞ்சு ஆகியவற்றை தரையில் போட்டு அடித்து நொறுக்கியும், அவற்றின் மீது ஏறி நின்றும் உடைக்கும் காட்சிகள் முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
பள்ளியில் பிரிவு உபசார விழாவுக்கு (பேர்வெல் பார்ட்டி) அனுமதி அளிக்காததால் பிளஸ்-2 மாணவர்கள் 10 பேர் பொருட்களை அடித்து உடைத்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10 மாணவர்களும் பள்ளியில் இருந்து இடை நீக்கம் செய்து அவர்கள் அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி வரை பள்ளிக்கு வர தடை விதித்து மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், மாணவர்களால் உடைக்கப்பட்ட பொருட்களுக்கு அவர்களின் பெற்றோர் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது என வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் இன்று உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி வகுப்பறைக்குள் செல்போன் கொண்டு வந்தால் மாணவர்கள் மீதும் அவர்களின் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story