கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தாள் தினம் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாக இனி கொண்டாடப்படும் என்றும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் என்றும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு பதிலளித்து அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சி.வி.கணேசன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். முன்னதாக காலை 10 மணிக்கு கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அப்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்தவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. 19 ஆண்டுகளாக முதல்-அமைச்சராக இருந்தவர்.
நாம் இன்று காணும் நவீன தமிழகத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. தமிழகத்தின் அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.
தலைவர்களோடு தலைவராக வாழ்ந்த அவர், பரந்து விரிந்த இந்த இந்திய அரசியலுக்கு வழிகாட்டியாக இருந்தவர். நின்ற தேர்தல்கள் அனைத்திலும் வென்ற ஒரே தலைவர் கருணாநிதி தான். 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கருணாநிதி.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாக இனி கொண்டாடப்படும். வரும் ஜூன் 3-ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.
நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக தூரம் தாண்ட முடியும் என்று அடிக்கடி சொல்வார் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி. நீண்ட தூரம் இந்த தமிழினத்துக்காக ஓடியவர் அவர். அவரை அதிக உயரத்தில் உயர்த்திப் பார்ப்பதை தனது கடமையாக கருதுகிறது தமிழக அரசு" என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story