“விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை?” - ஐகோர்ட் கேள்வி
விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்களையே நியமிக்க வேண்டும் என்ற உத்தரவில் தவறில்லை என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை,
தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி மறுத்ததை எதிர்த்து விளையாட்டு வீராங்கனை நித்யா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், கடந்த ஜனவரி 19 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை நியமிக்க கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை?” என்று கேள்வி எழுப்பினர். விளையாட்டு வீரர்களுக்காக அரசு கோடிக்கணக்கில் செலவிடக்கூடிய நிலையில், ஐந்து நட்சத்திர விடுதிகளில் அறைகளை எடுத்து விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை பறித்துச் செல்வதற்காகத் தான் அரசியல்வாதிகள் விளையாட்டுச் சங்கங்களுக்குள் நுழைகின்றனர் என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் அணிக்காகவும், மாநிலத்திற்காகவும், தேசத்திற்காகவும் விளையாடக்கூடிய வீரர்கள் மிக மோசமான முறையில் நடத்தப்படுவதாகவும், போட்டிகளில் கலந்து கொள்வதற்காக செல்லும் வீரர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை என்றும் நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே அரசியல்வாதிகளை விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக நியமிக்க கூடாது என்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story