ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு சட்டசபையில் அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு


ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு சட்டசபையில் அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 April 2022 2:54 AM IST (Updated: 27 April 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

விரைவில் சென்னை, தஞ்சை, மதுரை உள்ளிட்ட 7 இடங்களில் முகாம் நடத்தி ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

சென்னை,

2025-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக உருவாக்க முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, தற்போது 33,504 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 138 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்கு கல்வியும், இதர மறுவாழ்வு பலன்களும் வழங்கப்பட்டு உள்ளது. குழந்தைகளை பணிக்கு அமர்த்திய 136 நபர்களுக்கு நீதிமன்ற தண்டனையாக ரூ.13 லட்சத்து 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் சுமார் 38.5 லட்சம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில், 4 லட்சத்து 6 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.299 கோடி அளவில் கல்வி, திருமணம், மகப்பேறு, மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து இதுநாள் வரை 1,501 புதிய தொழிற்சாலைகள் இணைய வழியாக பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் 43,939 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தி.மு.க. அரசு பதவியேற்றது முதல் தற்போது வரை 56 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும், 447 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு 786 மாற்றுத்திறனாளிகள் உள்பட 70,120 நபர்களுக்கு தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

விரைவில், ஒட்டன்சத்திரம், தஞ்சை, ஓசூர், கள்ளக்குறிச்சி, மதுரை, பெரம்பலூர், சென்னை பெரம்பூரில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

11 தொழிற்பயிற்சி நிலையங்கள்

இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் பொருட்டு ரூ.97.55 கோடியில் புதியதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் ரூ.6.80 கோடி செலவில் தமிழில் வழங்கப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உபயோகமற்ற மற்றும் சீர்செய்ய இயலாத நிலையில் உள்ள எந்திரங்கள், கருவிகள் மற்றும் தளவாடங்கள் மாற்றப்பட்டு ரூ.20 கோடி செலவில் புதிய எந்திரங்கள், கருவிகள் மற்றும் தளவாடங்கள் நிறுவப்படும்.

கல்வி நலத்திட்ட உதவித்தொகை

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு நலத்திட்ட உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் ஆண்டிற்கு சுமார் 600 பதிவுபெற்ற பெண் கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவி தொகையான ஐ.டி.ஐ. அல்லது பாலிடெக்னிக் படிப்பினை வீட்டில் இருந்து சென்று படிப்பதற்கு ரூ.1,000 மற்றும் விடுதியில் தங்கி படிப்பதற்கு ரூ.1,200 ஆகியவை ஆண்டிற்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மகப்பேறு உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்வு

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் கியூஆர் கோடு மற்றும் சிப் பொருத்திய திறன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) ரூ.27.38 கோடி செலவில் வழங்கப்படும். தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் மகப்பேறு நலத்திட்ட உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

விடுமுறை ஓய்வு இல்லம்

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் அமைப்பு சார் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கென கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சிங்காரவேலர் இல்லம் எனும் விடுமுறை ஓய்வு இல்லத்தில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் ரூ.2.50 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும்.

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் தங்குவதற்கு என சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஜீவா இல்லம் எனும் ஓய்வு இல்லம் கூடுதல் படுக்கை வசதிகளுடன் ரூ.98.82 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும்.

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் அமைப்புசார் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கென, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள “ஜவஹர்லால் நேரு இல்லம்” எனும் விடுமுறை ஓய்வு இல்லம் ரூ.1.75 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story