கண்கருவிழி சரிபார்ப்பின் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க பரிசீலனை சட்டசபையில் அமைச்சர் தகவல்


கண்கருவிழி சரிபார்ப்பின் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க பரிசீலனை சட்டசபையில் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 27 April 2022 3:50 AM IST (Updated: 27 April 2022 3:50 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் கைரேகை பிரச்சினையால் பொருட்கள் கிடைக்கவில்லை என புகார்கள் வருவதை தொடர்ந்து, கண்கருவிழி சரிபார்ப்பின் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க திட்டமிட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), ‘ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறையால் பலருக்கு கைரேகை பதிவு விழவில்லை. இதனால் அவர்களால் ரேஷன் பொருட்கள் பெற முடியவில்லை. எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் மாற்று வழியில் பொருட்கள் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?' என்று அரசின் கவனத்தை ஈர்த்தார்.

இதற்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்து கூறியதாவது:-

ஆதார் எண் இணைக்கப்பட்டு விரல் ரேகை சரிபார்ப்பின் மூலம் பொருட்கள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் வந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

பிரதிநிதிகளை நியமிப்பதற்கான படிவங்கள் ரேஷன் கடைகளிலும், உணவுத்துறையின் இணையதளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை நிரப்பி விண்ணப்பித்து, பிரதிநிதிகளை கொண்டு உணவு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

கண்கருவிழி சரிபார்ப்பு முறை

தமிழகத்தில் 2 கோடியே 39 லட்சத்து 803 அங்கீகரிக்கப்பட்ட அட்டைகள் உள்ளது. அவற்றில் 22-ந் தேதி வரை ஒரு கோடியே 79 லட்சத்து 47 ஆயிரத்து 639 பரிவர்த்தனை மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கோடியே 76 லட்சத்து 30 ஆயிரத்து 498 பரிவர்த்தனைகள் (98.23 சதவீதம்) கைரேகை சரிபார்ப்பின் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எந்த தகுதியான அட்டைதாரர்களுக்கும் விற்பனை பொருட்கள் வழங்குவது தடைபடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் கைரேகை மற்றும் இதர பிரச்சினைகள் குறித்த புகார்கள் வருகிறது. எனவே மராட்டியம், தெலுங்கானா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ரேஷன் கடைகளில் கண்கருவிழி சரிபார்ப்பின் மூலம் செயல்படுத்தும் நடைமுறை ஏற்கனவே உள்ளது.

அதனடிப்படையில், தமிழகத்தில் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் 2 இடங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த திட்டம் மேம்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story