விளையாட்டு சங்கங்களில் நிர்வாகிகளாக அரசியல்வாதிகளை ஏன் நியமிக்க வேண்டும்? - ஐகோர்ட்டு கேள்வி


விளையாட்டு சங்கங்களில் நிர்வாகிகளாக அரசியல்வாதிகளை ஏன் நியமிக்க வேண்டும்? - ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 27 April 2022 3:52 AM IST (Updated: 27 April 2022 3:52 AM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக அரசியல்வாதிகளை ஏன் நியமிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட்டு, விளையாட்டு வீரர்களைத்தான் நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது என்று கூறியுள்ளது.

சென்னை,

தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து, வட்டெறிதல் வீராங்கனை நித்யா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை நியமிக்கக்கூடாது என்று கடந்த ஜனவரி 19-ந் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஏ.பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

என்ன தொடர்பு?

அப்போது நீதிபதிகள், "தனி நீதிபதியின் உத்தரவில் என்ன தவறு உள்ளது? விளையாட்டு சங்கங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்ன தொடர்பு? விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை பறித்துச்செல்லவே இவர்கள் விளையாட்டு சங்கங்களுக்குள் நுழைகின்றனர். அணிக்காகவும், மாநிலத்துக்காகவும், தேசத்துக்காகவும் விளையாடும் வீரர்கள் மிக மோசமான முறையில் நடத்தப்படுகின்றனர்.

போட்டிகளில் கலந்துகொள்ள செல்லும் வீரர்களுக்கு முறையான வசதிகள் செய்து கொடுப்பது இல்லை. அரசியல்வாதிகளை, விளையாட்டு சங்கங்களுக்கு தலைவராக ஏன் நியமிக்க வேண்டும்? விளையாட்டு வீரர்கள் அல்லாதவர்கள் ஏன் இச்சங்கங்களில் நுழைய வேண்டும்? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பி கருத்துக்களை தெரிவித்தனர்,

தள்ளுபடி

பின்னர் தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது, தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று கூறி, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story