நீதி கிடைத்திட அரசு துணை நிற்கும்: போலீஸ் காவலில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி


நீதி கிடைத்திட அரசு துணை நிற்கும்: போலீஸ் காவலில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி
x
தினத்தந்தி 27 April 2022 5:31 AM IST (Updated: 27 April 2022 5:31 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் காவலில் இருந்தபோது மரணம் அடைந்த விக்னேஷ் என்பவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், தி.மு.க. ஆட்சியில் மனித உரிமை காக்கப்பட்டு, உரிய நீதி கிடைத்திட அரசு என்றைக்கும் துணை நிற்கும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.), செல்வபெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.) மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரது மரணம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

புரசைவாக்கத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகியோரிடம் கஞ்சா போன்ற பொருட்கள் இருந்துள்ளது. இருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்தநிலையில் விக்னேஷ் இறந்துள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். மேலும் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தவறு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பறிமுதல்

இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து கூறியதாவது:-

சென்னை மாநகரக் காவல் துறையில் இரவு வழக்கமாக மேற்கொள்ளக்கூடிய வாகனச் சோதனையின் போது, சென்னை, பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ் ஆகிய இருவரும் வந்த ஆட்டோவை கெல்லீஸ் அருகிலே போலீசார் நிறுத்தியிருக்கிறார்கள். கஞ்சா போதையில் இருந்த அவர்களை போலீசார் விசாரித்தபோது, சரியான பதில் சொல்லாத காரணத்தால், வாகனத்தையும், அவர்களையும் சோதனையிட்டிருக்கிறார்கள். அப்படிச் சோதனையிட்டபோது, அவர்களிடம் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்திருக்கிறது.

பிறகு அவர்களை போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார்கள். ஆனால், விக்னேஷ் என்பவர் போலீசாருடன் வர மறுத்திருக்கிறார். மறுத்தது மட்டுமல்ல, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீசாரை தாக்க முயற்சித்திருக்கிறார். அதைச் சமாளித்து, இருவரையும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து, ஆட்டோவில் இருந்த கஞ்சா மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

மரணம்

இவர்களின் பின்புலத்தை எப்.ஆர்.எஸ். என்ற செயலியின்மூலம் ஆய்வு செய்தபோது, சுரேஷ் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 11 வழக்குகளும், விக்னேஷ் மீது ஏற்கெனவே 2 களவு வழக்குகளும் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அடுத்த நாள் காலை, அதாவது 19-ந்தேதி காலை, இருவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டிருக்கிறது. காலை உணவு சாப்பிட்டபின், விக்னேஷ்க்கு திடீரென்று வாந்தி, வலிப்பு வந்திருக்கிறது.

உடனே அருகில் இருக்கக்கூடிய தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

இதனைத் தொடர்ந்து, விக்னேஷ் இறப்பு குறித்து “சந்தேக மரணம்” என முறைப்படி வழக்குப்பதிவு செய்து, மாஜிஸ்திரேட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விக்னேஷினுடைய உடல் 20-ந்தேதி அன்று மாஜிஸ்திரேட்டு முன்னிலையில், மருத்துவக் குழுவினரால் பிணக் கூராய்வு செய்யப்பட்டிருக்கிறது. இது வீடியோ மூலமும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர், அன்றே உறவினர்களிடம் முறைப்படி விக்னேஷினுடைய உடல் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கு சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் உள்ள நிலையில், தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்க் காவல் படைக் காவலர் தீபக் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், காவல் துறை இயக்குனர் மேல் விசாரணைக்காக இவ்வழக்கினை 24-ந்தேதி அன்று சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

ரூ.10 லட்சம் நிதியுதவி

ஆகவே, விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக அரசு எடுத்து வருகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தி.மு.க. காவல் மரணங்கள் தீர விசாரிக்கப்பட்டு, அது எவ்வாறானதாக இருந்தாலும், அந்நிகழ்வில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது.

அதே வகையில், இந்த வழக்கும் முறையாக விசாரிக்கப்பட்டு, கடைக்கோடி மனிதனுக்கும், அவர்களின் மனித உரிமை காக்கப்பட்டு, உரிய நீதி கிடைத்திட இந்த அரசும், தி.மு.க.வும் என்றைக்கும் துணை நிற்கும் என்பதை இந்த அவையில் இருக்கக்கூடிய, இந்த கவன ஈர்ப்பைக் கொண்டு வந்து உரையாற்றியவர்களுக்கு மட்டுமல்ல; இங்கேயிருக்கக்கூடிய எல்லா உறுப்பினர்களுக்கும் இதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

வழக்கினுடைய முடிவுகள் எப்படியிருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்தினுடைய ஏழ்மை நிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அந்தக் குடும்பத்திற்கு வழங்கப்படும். அதே அடிப்படையில், சுரேஷ் உயர் சிகிச்சைக்கான செலவையும் அரசே ஏற்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story