டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு


டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு
x
தினத்தந்தி 27 April 2022 5:33 AM IST (Updated: 27 April 2022 5:33 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு அளிக்கப்படுவதாக சட்டசபையில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அறிவித்தார்.

சென்னை,

கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு விடுதலையாகி மனம் திருந்துபவர்களின் பொருளாதார மறுவாழ்வுக்காகவும், அவர்கள் மீண்டும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் வேறு தொழில்களை மேற்கொள்ள உதவுவதற்காகவும் ரூ.5 கோடி மானியமாக மறுவாழ்வு நிதி வழங்கப்படும்.

மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்துடன், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தையும் இணைந்து மேற்கொள்ள ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் அலுவலகத்தை மேம்படுத்தி நவீனமாக்கவும், மின் இணைப்பு வசதிகளை பொதுப்பணித்துறையின் மூலம் புதுப்பித்து மேம்படுத்துவதற்கும் ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மதுவிலக்கு குற்றவாளிகளின் இரவு நேர சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, 20 சோதனைச்சாவடிகளில் மின்கலத்துடன் கூடிய சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் கருவிகளை பொருத்த ரூ.13 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்யப்படும்.

ரூ.500 ஊதிய உயர்வு

தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தில் (டாஸ்மாக்) 6,715 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரம் விற்பனையாளர்கள் மற்றும் 3,090 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 24,805 சில்லரை விற்பனை பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள். இந்த பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 ஏப்ரல் முதல் உயர்த்தி வழங்கப்படும்.

இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.16 கோடியே 67 லட்சம் கூடுதல் செலவாகும். மாணவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும், போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இந்த நிதியாண்டில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story