13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை - ஊட்டி கோர்ட்டு தீர்ப்பு...!


13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை - ஊட்டி கோர்ட்டு தீர்ப்பு...!
x
தினத்தந்தி 27 April 2022 9:00 PM IST (Updated: 27 April 2022 8:48 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நீலகிரி,

ஜார்கண்ட் மாநிலம் குட்டம் பகுதியை சேர்ந்தவர் விஜய் ஓரான் (வயது 30). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. இவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருடன் இந்த பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி குன்னூர் கிளிஞ்சாடா பகுதியில் வசித்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதார். இதை தொடர்ந்து சிறுமியின் தாயார் குன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே சொந்த ஊரான ஜார்கண்ட் தப்பிச்சென்ற விஜய் ஓரானை போலீசார் கைது செய்து கொண்டு வந்தனர். இதுகுறித்து ஊட்டி மகிளா கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு குறித்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த  விஜய் ஓரானுக்கு  20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பளித்தார்.

மேலும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று உத்தரவிட்டார்.

Next Story