“காலத்தினால் செய்த நன்றி” - ஊடகத்துறையினருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பல உயிர்களைச் சேகரித்துத் தந்த ஊடகத்துறையினருக்கு தனது பாராட்டுகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை சென்ட்ரல் பகுதியில் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நோய், விபத்து என உடல்நலக்குறைக்கு உள்ளான நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கான வருகின்றனர். மருத்துவமனையில் உள்நோயாளி, புறநோயாளிகள் பிரிவுகளும் உள்ளன. பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவுகளும் இங்கு உள்ளது.
இந்நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கல்லீரல் சிகிச்சை பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இதில், கல்லீரல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சில நோயாளிகள் சிக்கிக்கொண்டனர். தீ மளமளவென பரவத்தொடங்கிய நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் நோயாளிகளை சுமந்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்தது. மேலும், உதவி செய்த பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டுக்களும் குவிந்து வந்தது.
இந்த நிலையில், இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், “சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட சிறிய தீவிபத்து குறித்து செய்தி சேகரிக்க வந்த இடத்தில், மனிதத்தால் உந்தப்பட்டு-நேரத்தின் அருமை உணர்ந்து-பல உயிர்களைச் சேகரித்துத் தந்துள்ளனர் நம் ஊடகத்துறை நண்பர்கள்! காலத்தினால் செய்த நன்றிக்கு என் பாராட்டுகள்!” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட சிறிய தீவிபத்து குறித்து செய்தி சேகரிக்க வந்த இடத்தில்,
— M.K.Stalin (@mkstalin) April 27, 2022
மனிதத்தால் உந்தப்பட்டு - நேரத்தின் அருமை உணர்ந்து - பல உயிர்களைச் சேகரித்துத் தந்துள்ளனர் நம் ஊடகத்துறை நண்பர்கள்!
காலத்தினால் செய்த நன்றிக்கு என் பாராட்டுகள்! pic.twitter.com/jzMftjjSO3
Related Tags :
Next Story