சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 27 April 2022 10:06 PM GMT (Updated: 27 April 2022 10:06 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 46 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 935 கிராம் தங்கம், வெளிநாட்டு சிகரெட்டுகள், ஐபோன்கள், மின்சாதன பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த திருச்சியை சேர்ந்த அப்துல் பாசித் (வயது 32), சிவகங்கையை சேர்ந்த சாகுல் அமீது (34), தேனியை சேர்ந்த சரவணன் (33) ஆகிய 3 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அதில் அப்துல் பாசித், பழைய ஒலி பெருக்கி வைத்திருந்தார். அதை பிரித்து பார்த்தபோது அதில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

ரூ.1½ கோடி தங்கம்

அதேபோல் சரவணன், சாகுல் அமீது ஆகியோர் உடமைகளுக்கு நடுவே தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. மேலும் 3 பேரிடமும் வெளிநாட்டு சிகரெட்டுகள், ஐபோன்கள், மின்சாதன பொருட்களும் இருந்தன.

இதையடுத்து 3 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 46 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 935 கிராம் தங்கம், வெளிநாட்டு சிகரெட்டுகள், ஐபோன்கள், மின்சாதன பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story