தஞ்சை அருகே தேர் திருவிழாவில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி 11 பேர் பலி முதல்-அமைச்சர் அஞ்சலி


தஞ்சை அருகே தேர் திருவிழாவில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி 11 பேர் பலி முதல்-அமைச்சர் அஞ்சலி
x

தஞ்சை அருகே நேற்று நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் என்கிற திருநாவுக்கரசு சுவாமிகளின் மடம் அமைக்கப்பட்டது.

தேர் புறப்பாடு

அப்பர் சுவாமிகள் இங்கு ஓய்வு எடுத்துச்சென்றதன் நினைவாக இந்த மடம் கட்டப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதயவிழா 3 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான 94-வது ஆண்டு அப்பர் சதயவிழா நேற்று முன்தினம் காலை தொடங்கியது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு மேல் தேர் புறப்பாடு நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் களிமேடு கிராமத்தினர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். 20 அடி உயரத்திற்கு மின்அலங்காரம் செய்யப்பட்டிருந்த தேரில் அப்பர் படம், சிலை வைத்து பொதுமக்கள் இழுத்து சென்றனர். தேரின் பின்பகுதியில் ஜெனரேட்டர் வைக்கப்பட்டு அதன்மூலம் தேருக்கு மின்சார வசதி செய்யப்பட்டு இருந்தது.

எதிர்பார்க்காத வகையில்...

களிமேடு கிராமத்தில் உள்ள வீதிகளில் தேர் வலம் வந்தது. தேரில் பூசாரி மற்றும் சிறுவர்கள் உள்பட சிலர் மட்டும் அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். நேற்று அதிகாலை 3.10 மணி அளவில் தேர் கீழத்தெரு பகுதிக்கு சென்றது. அந்த தெருவில் உள்ளவர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டவுடன் தேரை மீண்டும் மடத்திற்கு கொண்டு செல்ல திருப்பினர்.

அப்போதுதான் யாருமே எதிர்பாராத வகையில் அனைவரது நெஞ்சையும் உலுக்கும் வகையில் அந்த துயர சம்பவம் நடந்தது. தேரை திருப்பியபோது பின்னால் வைக்கப்பட்டு இருந்த ஜெனரேட்டரின் எடை அதிகமாக இருந்ததால் தேரை சரியான நிலையில் திருப்ப முடியாமல் போனது. இதனால் தேர் ஒருபக்கமாக இழுக்க தொடங்கியது.

மின்சாரம் பாய்ந்தது

அந்த நேரத்தில் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் தேரின் அலங்கார தட்டி உரசியது. இதன் காரணமாக தேர் மீது மின்சாரம் பாய்ந்து தேர் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே தேரில் அமர்ந்து இருந்த பூசாரி உள்பட சிறுவர்களும், தேரை சுற்றி நின்றவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.

சாலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டு இருந்ததால் அவற்றில் மின்சாரம் பாய்ந்து ஆங்காங்கே நின்றவர்களும் சுருண்டு கீழே விழுந்தனர்.

சுருண்டு விழுந்தனர்

இதனால் தூரத்தில் நின்றவர்கள் செய்வதறியாமல் தவித்தனர். ஒரு சிலர் தேர் எரிவதை பார்த்ததும் தீயின் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர்களும் சுருண்டு கீழே விழுந்தனர்.

அப்போதுதான் விபரீதத்தை உணர்ந்த மக்கள் தேரின் அருகே செல்லாமல் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்ததுடன் மின்சாரத்தையும் நிறுத்தினர்.

3 சிறுவர்கள் உள்பட 11 பேர் பலி

பின்னர் தூரத்தில் நின்றவர்கள் தேரின் அருகே சென்று பார்த்தனர். இதில் மின்சாரம் தாக்கியதில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரிய வந்தது. இதனையடுத்து படுகாயம் அடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்தநிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் 13 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

இந்த விபத்தில் மோகன் (வயது 22), முன்னாள் ராணுவ வீரர் பிரபாத்(47), ராகவன்(24), அன்பழகன்(60), செல்வம்(56), ராஜ்குமார் (14), சாமிநாதன்(56), கோவிந்தராஜ்(50), பரணி(13), நாகராஜ்(60), சந்தோஷ்(15) ஆகிய 11 பேரும் இறந்தனர்.

சோகத்தில் மூழ்கிய கிராமம்

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் விபத்து நடந்த களிமேடு கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் களிமேடு பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விபத்தில் பலியானவர்களின் உடல்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத வண்ணமாக உள்ளதால் ஆஸ்பத்திரி வளாகமே ஒரே கூக்குரலாக ஒலித்தது. பிரேதபரிசோதனைக்கு பின்னர் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் களிமேடு கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 11 பேர் பலியான சம்பவத்தால் களிமேடு கிராமமே சோகத்தில் மூழ்கியது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கும், காயம் அடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்சி வழியாக களிமேடு கிராமத்திற்கு வந்தார்.

அங்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பலியான ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று, பலியானவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து பலியானோரின் குடும்பத்தினருக்கு சட்டசபையில் அறிவித்தபடி ரூ.5 லட்சத்திற்கான நிவாரண உதவித்தொகை வழங்கினார்.

ஆறுதல் கூறினார்

பின்னர் தீ விபத்தில் எரிந்து சேதம் அடைந்த தேரை பார்வையிட்டு நடந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் தனியாக தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து காயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசின் சார்பில் தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், தி.மு.க. சார்பில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.

Next Story