பெரம்பலூர் நீதிமன்றம் முன்பு பரபரப்பு: மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற விவசாயி
பெரம்பலூர் நீதிமன்றம் முன்பு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடி பஜனை மடத் தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 47). விவசாயியான இவர் சொந்தமாக நெல் அறுவடை எந்திரம் வைத்தும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுதா(40). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக சுதா தனது கணவரை விட்டு பிரிந்து பூலாம்பாடியில் தனியாக வசித்து வருகிறார். மேலும் சுதா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து, ஜீவனாம்சம் கேட்டு கடந்த 2020-ம் ஆண்டு பெரம்பலூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் பெரம்பலூர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக ஆஜராக சுதா அரசு டவுன் பஸ்சில் வந்து இறங்கினார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த அவருடைய கணவர் காமராஜ் ஓடி வந்து மனைவி சுதாவை தாக்கி முகம், கால் உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு, கழுத்தை அறுக்க முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் ஓடிச் சென்று அவரை தடுத்து நிறுத்தி சுதாவை காப்பாற்றி, காமராஜை கையும், களவுமாக பிடித்தனர்.
இதில் ஆயுதப்படை போலீஸ்காரர் அழகேசனுக்கு (29) வலது கையில் கத்தி குத்து விழுந்தது. மேலும் காமராஜூக்கும் இடது கையில் கத்தி குத்தியது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த சுதாவையும், காயமடைந்த போலீஸ்காரரையும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காமராஜை கைது செய்த போலீசார், அவர் வைத்திருந்த காய்கறிகள் வெட்டும் கத்தியை கைப்பற்றினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். காமராஜ் மனைவி சுதாவுக்கும், அரசு பள்ளி விடுதி காப்பாளர் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால்கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுதா கணவர் வீட்டில் இருந்த நகைகள், பணத்தை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் மகன், மகளை கவனிக்காமல் விவாகரத்து கேட்டு சுதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடத்தி வருவதால் ஆத்திரமடைந்த காமராஜ், நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்த மனைவி சுதாவை கொலை செய்யும் நோக்கத்தில் கத்தியால் குத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் நீதிமன்றம் முன்பு மனைவியை கணவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story