திண்டுக்கல்லில் புதிய திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல்லில் நடைபெறும் விழாவில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
திண்டுக்கல்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) திண்டுக்கல்லுக்கு வருகிறார். அப்போது புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்கான விழா திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.54 கோடி மதிப்பிலான 170 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் நிறைவுபெற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் காந்திராஜன், இ.பெ.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவையொட்டி அங்கு விலாஸ் பள்ளி வளாகத்தில் பிரமாண்ட மேடையுடன் பந்தல் அமைக்கப்பட்டு இருக்கிறது. முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்க தேனியில் இருந்து வத்தலக்குண்டு வழியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல்லுக்கு வருகிறார். எனவே வத்தலக்குண்டு புறவழிச்சாலையில் முதல்-அமைச்சருக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்காக அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
மேலும் முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக திண்டுக்கல்லில் விழா நடைபெறும் இடம் மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் பாதைகளில் தி.மு.க. கட்சி கொடி கட்டப்பட்டு இருக்கிறது. விழா பந்தலில் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதன்மூலம் திண்டுக்கல் நகரமே விழாக்கோலம் பூண்டு இருக்கிறது.
Related Tags :
Next Story