தமிழக முதல்-அமைச்சரை காண செல்போன் டவரில் ஏறிய வாலிபர் கைது..!


தமிழக முதல்-அமைச்சரை காண செல்போன் டவரில் ஏறிய வாலிபர் கைது..!
x
தினத்தந்தி 30 April 2022 6:01 PM IST (Updated: 30 April 2022 6:01 PM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு அருகே செல்போன் டவரில் ஏறி தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்த்த கேபிள் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்:

தமிழக முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் தேனி நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று மதியம் 12 மணியளவில் கட்டகாமன்பட்டி வத்தலகுண்டு செம்பட்டி வழியாக திண்டுக்கல் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி யைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் குருசங்கர் (வயது 22). கேபிள் ஆபரேட்டராக உள்ளார். இவர் இன்று காலை 11 மணி அளவில் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் செல்போன் டவரில் மளமளவென்று 100 அடி உயரத்திற்கு ஏறினார். இதுகுறித்து அங்குள்ளவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கூறினர்.

போலீசார் அங்கு வந்து குரு சங்கரை இறங்கும்படி கூறினர். அதற்கு அவர் தமிழக முதல்-அமைச்சர் மு.கஸ்டாலினை பார்க்க தான் ஏறி உள்ளேன். அவர் இவ்வழியே சென்றதும் இறங்கி விடுவேன் என்று கூறினார். போலீசார் எவ்வளவோ வற்புறுத்தியும் குருசங்கர் கேட்கவில்லை. 

அதைத்தொடர்ந்து போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தனர். எவ்வளவு சொல்லியும் கேட்காததால் செல்போனில் பேசி தாங்களே முதல்-அமைச்சரை அருகில் பார்க்க ஏற்பாடு செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறினார். அதற்கு குருசங்கர் ஒப்புக்கொள்ளாமல் அடம்பிடித்துள்ளார். 

பின்னர் குருசங்கர் தந்தை உயரத்தில் இருந்தால் உனக்கு சிர  கிறுகிறுப்பு வந்துவிடும் நானும் அங்கு வருகிறேன் என்று கூறினார். அதற்கும் ஒப்புக்கொள்ளாமல் நான் இங்கிருந்துதான் பார்ப்பேன், முதல்-அமைச்சர் சென்றதும் இறங்கிவிடுவேன். இப்போதே இறங்க கட்டாயப் படுத்தினால் அல்லது யாராவது ஏறி வந்தால் கீழே குதித்து விடுவேன் என்று பயமுறுத்தினார். 

இதற்கிடையே தமிழக முதல்-அமைச்சர் குறிப்பிட்ட நேரத்தில் அந்த பகுதியை கடந்து சென்றார். அதை தொடர்ந்து குருசங்கர் தானாகவே கீழே இறங்கினார். பின்னர் வத்தலக்குண்டு போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story