தமிழகத்தில் 5 முதல் 11 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மையங்கள் தயார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் 5 முதல் 11 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மையங்கள் தயார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 1 May 2022 1:35 AM IST (Updated: 1 May 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு அனுமதி அளித்த அடுத்த ஒரு மணி நேரத்தில், 5 முதல் 11 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தமிழகத்தில் மையங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நவீன கணினி மையம்

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், மடுவின்கரை சென்னை மேல்நிலைப்பள்ளியில் ரூ.52 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி உயர் தொழில்நுட்ப கணினி மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். அப்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 உயர்நிலைப் பள்ளிகளும், 38 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 22 மாநகராட்சி பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

சிறுவர்களுக்கு தடுப்பூசி

தனியார் நிறுவன பங்களிப்புடன் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட கணினி மையத்தை தொடர்ந்து தற்போது மடுவின்கரை மேல்நிலைப்பள்ளியில் கணினி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 முதல் 11 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் தடுப்பூசி உடனடியாக செலுத்தும் வகையில் அனைத்து மையங்களும் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், மண்டல தலைவர்கள் ஆர்.துரைராஜ், எம்.கிருஷ்ணமூர்த்தி, துணை கமிஷனர்கள் டி.சினேகா, சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story