திருவான்மியூரில் 2 மீனவர்கள் ஓட, ஓட விரட்டி கொலை - வெறிச்செயலில் ஈடுபட்ட நண்பர் கைது
சென்னை அருகே நடந்த துக்க நிகழ்ச்சியில் மீனவர்களிடையே குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் 2 மீனவர்களை ஓட, ஓட விரட்டி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
சென்னை திருவான்மியூர் நடுக்குப்பம் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வி (வயது 43) என்ற பெண் கடந்த 16-ந்தேதி உயிரிழந்தார். இவருடைய 16-வது நாள் காரிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த நெருங்கி நண்பர்களான மீனவர்கள் சதீஷ்குமார் என்கிற பாபு (வயது 27), அருண் (22), தினேஷ் (22) ஆகிய 3 பேரும் பங்கேற்றனர். காரியத்தில் கலந்துகொண்டவர்களுக்கு வீட்டின் வெளியே உணவு பரிமாறப்பட்டது. அருணும், பாபுவும் ஒரு வரிசையிலும், தினேஷ் எதிர் வரிசையிலும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். 3 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அருண் விளையாட்டாக செருப்பை எடுத்து வீசிய போது செருப்பில் இருந்த மண் தினேஷ் சாப்பாட்டில் விழுந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ், அருணை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளார். அப்போது சண்டையை விலக்க வந்த பாபுவையும் அவர் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து அருணும், பாபுவும் ஒன்று சேர்ந்து தினேஷை தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் இரவு 8 மணியளவில் நடந்துள்ளது.
இந்த நிலையில் இரவு 11 மணியளவில் அருணும், பாபுவும் நடுக்குப்பம் கடற்கரை பகுதியையொட்டி உள்ள பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது தினேஷ் கையில் மீன்வெட்டும் கத்தியுடன் ஆவேசமாக வந்து அருணையும், பாபுவையும் சரமாரியாக தாக்கினார்.
உயிருக்கு பயந்து ஓடிய 2 பேரையும் கொலைவெறியுடன் ஓட, ஓட விரட்டி சென்று குத்தி உள்ளார். இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். பின்னர் தினேஷ் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் ஊர் மக்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அருண், பாபு ஆகிய 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.
நண்பர்களை கொலை செய்த தினேஷ் கைது செய்யப்பட்டார். இந்த இரட்டை கொலை சம்பவம் திருவான்மியூர் நடுக்குப்பம் பகுதியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story