கிராமசபை கூட்டத்தில் தலைமைச்செயலாளர் பங்கேற்பு


கிராமசபை கூட்டத்தில் தலைமைச்செயலாளர் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 May 2022 5:37 AM IST (Updated: 2 May 2022 5:37 AM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூர் அடுத்த நடுவீரப்பட்டு மற்றும் சோமங்கலம் ஊராட்சிகளில் நடந்த கிராமசபை கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு கலந்து கொண்டார்.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுவீரப்பட்டு மற்றும் சோமங்கலம் ஊராட்சிகளில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் தலைமைச்செயலாளர் இறையன்பு கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் ஊராட்சிகளின் 2021-2022-ம் ஆண்டுக்கான வரவு, செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

துப்புரவு பணியாளர்கள் கவுரவிப்பு

கிராம ஊராட்சிகள் தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட கடந்த நிதி ஆண்டுக்கான வரவு, செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்தி பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பெரிய பதாகை மூலம் வரவு, செலவு கணக்கு (படிவம் 30-ன் சுருக்கம்) வைக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு கிராமசபை கூட்டங்களில் கூட்டப்பொருட்கள் ஊராட்சி மன்ற செயலாளர்களால் படிக்கப்பட்டு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அதனைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள், தூய்மைக்காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு, மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

பங்கேற்பு

கிராம சபை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, நடுவீரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, துணைத்தலைவர் ஞானமணி சகாயராஜ், சோமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆரிக்கியம் ஜெயபால், துணைத்தலைவர் பவானி ஞானசேகர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Next Story