குடியாத்தத்தில் பரபரப்பு - மின்வாரிய அதிகாரி மீது சரமாரி தாக்குதல்...!


குடியாத்தத்தில் பரபரப்பு - மின்வாரிய அதிகாரி மீது சரமாரி தாக்குதல்...!
x
தினத்தந்தி 2 May 2022 5:01 AM GMT (Updated: 2022-05-02T10:31:17+05:30)

குடியாத்தம் அருகே மின்வாரிய அதிகாரி மீது சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. 

இத்தகைய மரங்கள் மின் கம்பிகள் மீதும் விழுந்ததால் மின்சாரம்  துண்டிக்கப்பட்டது. குடியாத்தம் முழுவதும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் மின்கம்பங்களில் மீது விழுந்த மரக் கிளைகளை அகற்றி படிப்படியாக மின் வினியோகம் வழங்கினார்கள். சில கிராமங்களில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

இந்நிலையில் மரக்கிளைகள் விழுந்த பகுதிகளை பாக்கம் இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஊழியர்கள் பார்வையிட்டு மரக்கிளைகளை அப்புறப்படுத்தி மின்சாரம் வழங்கும் பணியை மேற்கொண்டுவந்தனர்.

அப்போது லட்சுமணாபுரம், கள்ளூர் பகுதிகளில் மீண்டும் மின்சாரம் தடைபட்டு உள்ளது.  இதனால் இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பாக்கம் துணை மின் நிலையத்தில் மின்தடை குறித்து தகவல் தெரிவித்தனர்.  

இதனையடுத்து இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஊழியர்கள் விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். அப்போது கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் உள்ளிட்ட சிலர் பல மணி நேரம் மின்தடை ஏற்படுத்தியது ஏன் என மின்வாரிய அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அவர்கள் மரக்கிளைகள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது என விளக்கம் அளித்து சென்று உள்ளனர். பின்னர் அவர்களை பின்தொடர்ந்து வந்த மதன்குமார் மற்றும் சிலர் அவர்களை சித்தூர் கேட் அருகே வழி மடக்கி சரமாரியாக தாக்கி,கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.  

இந்த தாக்குதலில் இளநிலை பொறியாளர் என். பாலகிருஷ்ணன்(வயது57), மின்வாரிய போர்மேன் ஆர்.ரவிச்சந்திரன் (60), மின்வாரிய ஒயர்மேன்கள் ஏ.பிரகாசம் (46), டி.என். பெருமாள்(55), மின் பாதை ஆய்வாளர் சேகர்(50), ஊழியர் ராஜ்குமார் (25) உள்ளிட்ட 6 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் தற்போது குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மின்வாரிய அதிகாரி மற்றும் ஊழியர்களை குடியாத்தம் எம்எல்ஏ அமலா விஜயன், குடியாத்தம் நகர மன்ற தலைவர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.  மேலும் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

இதேபோன்று குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்வாரிய ஊழியர்களிடம்  தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.  மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story