சுற்றுலா பயணிகளின் காரை தாக்கிய காட்டு யானையால் பரபரப்பு...!
கோத்தகிரி அருகே சுற்றுலா பயணிகளின் காரை காட்டு யானை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணியின் காரை வழிமறித்த காட்டு யானை, காரின் முன் பகுதியைத் தாக்கி சேதப்படுத்தி அட்டகாசம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோடைக்காலம் துவங்கி உள்ளதால் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பலா மரங்களில் பலாப்பிஞ்சுகள் காய்க்கத் தொடங்கி உள்ளது.
கொடை காலத்தில் ஏற்பட்டு உள்ள வறட்சி காரணமாக வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறிய காட்டு யானைகள் குஞ்சப்பனை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பலா மரங்களில் உள்ள பலாக் காய்களை உண்பதற்காக வருகின்றனர்.
இவ்வாறு வரும் யானைகள் அவ்வப்போது கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உலா வந்த வண்ணம் உள்ளன.
மேலும் அவ்வழியாக செல்லும் அரசு பஸ் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும் என வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் பகுதிக்கு சுற்றுலா வந்த பயணிகள் தங்களது காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது குஞ்சப்பனை சோதனை சாவடி அருகே சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காரை சற்று தொலைவிலேயே நிறுத்தினர்.
காரைக் கண்டு மிரண்ட காட்டு யானை காரை நோக்கி ஓடி வந்து காரின் முன் பகுதியை தனது தும்பிக்கையால் தாக்கி சேதப்படுத்தியது. இதன் காரணமாக காரில் இருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக காரின் டிரைவர் காரை பின்னோக்கி சாமர்த்தியமாக செலுத்தியதால் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்பபடவில்லை.
பின்னர் சற்று நேரம் சாலையில் நின்றுக் கொண்டிருந்த காட்டு யானை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றது. யானை சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்ததால் கோத்தகிரி சாலை ஏராளமான வாகனங்கள் வரிசையாக காத்து நின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story