தனியார் பள்ளியில் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்...!
கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்ஜி அருகே தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் பெற்றோர்கள், குழந்தைகள் இடையில் உள்ள பாசம் மற்றும் அன்பினை வெளிப்படுத்தும் வகையிலும், அரசு பொது தேர்வினை ஊக்கத்துடன் எதிர்கொள்ளும் வகையில் பெற்றோர்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகள் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி நிறுவனர் எம். பரமசிவம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அமுதவள்ளி வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹரி கண்ணன், வழக்கறிஞர் ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினர்கள்.
இதனை தொடர்ந்து பள்ளியில் அரசு பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோர்களின் கால்களை பன்னீரால் சுத்தப்படுதி, பூக்களால் பூஜை செய்தும், ஆரத்தி எடுத்தும் மரியாதை செய்தனர்.
அப்போது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரவணைத்து இனிப்பு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சி நடைபெறும் பின்னணியில் தந்தை-குழந்தை, தாய் - குழந்தைகள் பாசத்தினை வெளிப்படுத்தும் திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டதும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களும், குழந்தைகளும் ஆனந்த கண்ணீர் சிந்தி தங்களது பாசத்தினை வெளிப்படுத்தியது அங்கிருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story