ரமலான் தொழுகை மேற்கொள்வதில் தகராறு - காவல் நிலைய வாசலிலேயே இருதரப்பினர் கடும் மோதல்


ரமலான் தொழுகை மேற்கொள்வதில் தகராறு - காவல் நிலைய வாசலிலேயே இருதரப்பினர் கடும் மோதல்
x
தினத்தந்தி 3 May 2022 10:04 AM IST (Updated: 3 May 2022 10:04 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் போலீஸ் நிலையம் வாசல் முன்பு ரமலான் தொழுகை நடத்துவதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் முஸ்லீம் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது. இங்கு இரு தரப்பினர் இடையே பல வருடங்களாக பள்ளிவாசலை நிர்வாகம் செய்வது தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது.

இந்தநிலையில் வக்புவாரியம் ஒப்புதல் பேரில் பள்ளி வாசலை நிர்வாகம் செய்து வரும் ஒரு தரப்பினர் நேற்று ரமலான் சிறப்பு தொழுகை நடத்தினர். இதையடுத்து இன்று மற்றோரு தரப்பினர் சார்பில் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால் இரு தரப்பினரையும் அழைத்து நேற்று இரவு கன்னியாகுமரி போலீஸ்நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பைச் சேர்ந்த நிர்வாகிகளும் போலீஸ்நிலையத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அந்தநேரத்தில் வெளியே இருந்த இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். போலீஸ்நிலையம் முன்பு சாலையில் இருதரப்பினர் மோதி கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்தசம்பவம் பற்றி தகவல் அறிந்த ஒரு தரப்பினர் கன்னியாகுமரி- நாகர்கோவில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. 

இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இந்தசம்பவம் காரணமாக கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story