விருத்தாசலம் அருகே பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்..!


விருத்தாசலம் அருகே பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்..!
x
தினத்தந்தி 3 May 2022 6:43 AM GMT (Updated: 3 May 2022 6:43 AM GMT)

விருத்தாசலம் அருகே கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித் தரக்கோரி பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கோ.ஆதனூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 

இதில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டிடம் இல்லை. இதனால் மாணவர்கள் மரத்தடி நிழலில் அமர்ந்து பாடம் கற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த ஓட்டு கட்டிடங்களில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் போது, அந்த ஓடுகள் பெயர்ந்து மாணவர்கள் மீது விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து மாணவர்களும், பெற்றோர்களும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்ல.

இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் இன்று விடுமுறை என்றாலும் சீருடையில் விருத்தாசலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு திரண்டு வந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவர்கள் கடும் வெயிலில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெற்றோர்கள் சாமியானா பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர். இதனால் பெற்றோர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் விரைவில் உரிய அதிகாரியிடம் தெரிவித்து வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story