கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து - 3 பேர் படுகாயம்


கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து - 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 May 2022 3:28 PM IST (Updated: 3 May 2022 3:28 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி மலைப்பாதையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் வேனில் இருந்த 3 பேர் படுகாயமடைந்தனர்.

கோத்தகிரி:

ஹைதராபாத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது குடும்பத்தினர் 12 பேருடன், வாடகை சுற்றுலா வாகனம் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுகளித்து விட்டு, சொந்த ஊருக்குச் செல்வதற்காக அவர்கள் அனைவரும், இன்று மதியம் கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது வேனை கோவை இரத்தினபுரியைச் சேர்ந்த டிரைவர் தங்கவேல் மணி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். 

வேன் கொட்டக்கம்பை பகுதியில் சென்றுக் கொண்டிருக்கும் போது, டிரைவர் பிரேக் போட முயன்றுள்ளார். ஆனால் பிரேக் பிடிக்காமல், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானது. உடனடியாக அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் ரோந்துப் போலீசார் வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். 

மேலும் பலத்த காயமடைந்த ஸ்ரேயா சினானி (வயது 16), சரிதா சினானி (45), லட்சுமி ராமன்(39), மற்றும் லேசான காயமடைந்த ரிஷி (11) ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர். 

விபத்து நடத்த இடத்தின் இடது புறத்தில் உள்ள சுமார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாக வேண்டிய வாகனத்தை டிரைவர் சாமர்த்தியமாக வலது புறம் திருப்பியதால் வேன் சாலையில் கவிழ்ந்ததால், ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மலைப்பாதையில் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து ஏற்படுவதால், மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் போது டிரைவர்கள், வாகனங்களை இரண்டாவது கியரில் இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story