தொடங்கிய அக்னி நட்சத்திரம் - எந்தெந்த மாவட்டங்களில் வெயில் உச்சம்?


Image courtesy : PTI
x
Image courtesy : PTI
தினத்தந்தி 4 May 2022 3:05 PM IST (Updated: 4 May 2022 3:35 PM IST)
t-max-icont-min-icon

உள்மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 100 டிகிரியை தாண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இந்தியாவில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வட மாநிலங்களில் வெப்ப அலை காரணமாக சராசரி வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நிலையில், இன்னும் 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் தொடர உள்ளது.

இந்த காலகட்டத்தில் சராசரி வெப்பநிலை மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், இந்த நேரத்தில் பொதுமக்கள் அதிகமாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

தமிழகத்தைப் பொறுத்தவரை வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய நிலவரப்படி, கடலோர பகுதிகளில் வெப்பநிலை 90 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு இருக்கும் என்றும், உள்மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 100 டிகிரியை தாண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று சராசரி வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டாக உள்ளது. 

அதே போல தர்மபுரியில் 96 டிகிரி, கரூரில் 97 டிகிரி, சேலத்தில் 97, திருநெல்வேலியில் 99 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடலோர மாவட்டங்களில் பிற மாவட்டங்களை விட குறைவான வெப்பநிலை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story