வேலூர்: ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு...!
வேலூரில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூர்,
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள செறுவத்தூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி தேவநந்தா (வயது 16) கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் செந்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஷவர்மா கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.
அதன்படி வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனும் ஷவர்மா கடைகளில் ஆய்வுசெய்ய அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், கந்தவேலு, ரவிச்சந்திரன் ஆகியோர் இன்று வேலூர் சத்துவாச்சாரி, காட்பாடி சாலை, விருதம்பட்டு பகுதிகளில் உள்ள ஷவர்மா கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சில கடைகளில் சிக்கன், முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளை சரியாக வேகவைக்காமல் வழங்குவது தெரிய வந்தது. உணவு பாதுகாப்பத்துறை அதிகாரிகள், கடை ஊழியர்களிடம் சரியாக சமைக்காத, வேகவைக்காத உணவுகளில் சல்மோனல்லா, சபினோகாக்கஸ் என்ற பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே அசைவ உணவுகளை நன்கு வேகவைத்து சுத்தமான முறையில் வழங்க வேண்டும். ஷவர்மாவை நிரப்பும் எந்திரத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
மேலும் இந்த திடீர் ஆய்வு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் உணவின்தரம் தொடர்பாக 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்று உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story