1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள்: தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் - கல்வித்துறை அறிவிப்பு


1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள்: தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் - கல்வித்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 5 May 2022 5:30 AM IST (Updated: 5 May 2022 5:30 AM IST)
t-max-icont-min-icon

வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.

சென்னை,

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறந்து செயல்பட்டு வரும் நிலையில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு சற்று தாமதமாகவே தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மற்ற மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடக்குமா? என்று பேசப்பட்டு வந்தது.

ஆனால் அவர்களுக்கான தேர்வு கண்டிப்பாக நடக்கும் என்று கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்தது. அதன்படி, வருகிற 13-ந் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்கும் வகையில் அட்டவணையையும் வெளியிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு இடையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயிலின் கொடுமையும் வாட்டி வதைக்கும் என்பதாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது தொடர்பாக ஏதாவது அறிவிப்பு வெளியாகும் என்று கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

கல்வித்துறையின் முடிவு என்ன?

இந்தியாவின் வட மாநிலங்களில் இந்த வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால், சில மாநிலங்களில் பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு சில குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி இருக்கிறது. சில மாநிலங்கள் பள்ளிகளுக்கு விடுமுறையையும் அறிவித்து இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முடிவு என்ன? என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. கடந்த 2-ந் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறும்போது, ‘கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடுவது தொடர்பாக பரிசீலித்து முடிவு அறிவிக்கப்படும்' என்று தெரிவித்தார்.

தேர்வுக்கு மட்டும் வந்தால் போதும்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடங்கி நடைபெறுகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இடைவெளி விட்டு தேர்வு நடைபெற உள்ளது. கொளுத்தும் கோடை வெயிலில் பெரியவர்களாலேயே வெளியில் செல்ல முடியாத நிலை இருக்கும் போது, மாணவர்களை தேர்வுக்கு மட்டும் பள்ளிக்கு வரச்சொல்லலாமே, மற்ற நாட்கள் அவர்களுக்கு விடுமுறை வழங்கினால் அவர்களின் உடல்நலன் காக்கப்படுமே என்று கல்வியாளர்கள், பெற்றோர் தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.

அந்த வகையில் சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இதுதொடர்பாக நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும். தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு மாணவர்கள் வரத்தேவையில்லை. வெயிலின் தாக்கம் காரணமாகவும், மாணவர்கள் நலன் கருதியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.



Next Story