பழனி அருகே வாகனம் மோதி சிறுத்தை குட்டி உயிரிழப்பு...!


பழனி அருகே வாகனம் மோதி சிறுத்தை குட்டி உயிரிழப்பு...!
x

பழனி அருகே வாகனம் மோதி ஒரு வயது பெண் சிறுத்தை குட்டி உயிரிழந்து உள்ளது.

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, மான், முயல் என பல்வேறு விலங்குகள், அபூர்வ மூலிகைச் செடிகள், விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. இங்குள்ள வன உயிரினங்களை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பாக வனவிலங்கு வேட்டை, மரக் கடத்தல் ஆகியவற்றைத் தடுக்கும் பணியில் வனத்துறையினர் 24 மணி நேரமும் ரோந்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வனத்துறை ரோந்து சென்றபோது பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஒரு வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை குட்டி இறந்து கிடந்தது. இதுகுறித்து வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

அதன்பேரில் பழனி வனச்சரகர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சிறுத்தையை உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் சாலையை கடந்த போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை குட்டி உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு சிறுத்தையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சிறுத்தை இறந்தது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story