ஐரோப்பிய நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி..!


Image Courtesy: ANI
x
Image Courtesy: ANI
தினத்தந்தி 5 May 2022 12:23 PM IST (Updated: 5 May 2022 12:23 PM IST)
t-max-icont-min-icon

மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கான மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி திரும்பினார்.

புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டில் முதல்முறையாக கடந்த 2ஆம் தேதி முதல் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

மேலும் டென்மார்க் தலைநகரில் நடந்த உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அதன் இடையே சுவீடன், நார்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து ஆகிய 4 நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

முன்னதாக பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகள் சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்டமாக, நேற்று முன்தினம் டென்மார்க் சென்றார். அங்கு அந்த நாட்டின் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். அத்துடன், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இந்த நிலையில் கோபன்ஹேகன் நகரில் நேற்று நடந்த 2-வது இந்திய-நார்டிக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் நடத்திய இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் சுவீடன், நார்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்த மாநாட்டில் கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம், தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உலகளாவிய பாதுகாப்பு நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கான மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து தற்பொது வெளியான அரசாங்க வட்டார தகவல்படி,  உடனடியாக அலுவலகத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி, மழை மற்றும் வெப்ப அலைக்கான தயார்நிலைக்கான முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டத்திற்கும் தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story