அனைத்து அரசு பஸ்களிலும் 5 வயது வரை குழந்தைகளுக்கு இலவச பயணம்: அமைச்சர் அறிவிப்பு


அனைத்து அரசு பஸ்களிலும் 5 வயது வரை குழந்தைகளுக்கு இலவச பயணம்: அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 May 2022 12:30 AM GMT (Updated: 6 May 2022 12:30 AM GMT)

அனைத்து அரசு பஸ்களிலும் 5 வயது வரையுள்ள குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்ட சபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.

சென்னை,

அரசு பஸ்களில் பயணம் செய்யும் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. 3 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

புதிய அறிவிப்பு

இந்தநிலையில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் இனி அரசு பஸ்களில் இலவச பயணம் செய்யலாம் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று போக்குவரத்துத்துறை சம்பந்தமான புதிய அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நவீன மயமாக்கப்படும் தானியங்கி பணிமனைகள்

தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை ரூ.70 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்படும். பயண கட்டண சலுகை அனுமதி சீட்டுகளை பெறுவதற்காக பயணம் மேற்கொள்வதை குறைக்கவும், எளிதாகவும், வசதியானதாகவும்பயணச்சீட்டுகள் பெறுவதற்கு அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களின் வலைதளம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக இணையதள பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்.

சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.70.73 லட்சம் செலவிடப்படும்.

அரசு நடமாடும் பணிமனை

அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத்துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும், அரசு நடமாடும் பணிமனைகளை ரூ.1.36 கோடி செலவில், மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், சேலம் மற்றும் நெல்லை ஆகிய 7 இடங்களில் அமைக்கப்படும்.

அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் உருவாக்கப்படும். இதன் மூலம் உரிய போக்குவரத்து கழகங்களால் பயணிகள் குறைகள் மற்றும் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும்.

இணையவழி தகவல் அமைப்பு

பஸ்களின் வருகை, புறப்பாடு குறித்த நிகழ்நேர தகவல்கள் மதுரை மற்றும் கோவை நகரங்களில் மொத்தம் 16 பஸ் முனையங்களில் இணையவழி தகவல் அமைப்பு மூலமாக காட்சிப்படுத்தப்படும்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் வருவாயை அதிகரிக்கவும், பயணச்சுமை பெட்டியில்மீதமுள்ள இடத்தை சோதனை அடிப்படையில் சென்னை, திருச்சி மற்றும் மதுரை போன்ற இடங்களுக்கு மாதாந்திர அல்லது தினசரி வாடகை அடிப்படையில் பயணம் செய்யாத நபர்களின் பார்சல் மற்றும் தூதஞ்சல் அனுப்ப பயன்படுத்தப்படும்.

5 வயது வரை இலவச பயணம்

விழா நாட்கள் நீங்கலாக இதர நாட்களில், இணையவழி பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழி பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

தற்போது, 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பஸ்களிலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

புத்தாக்க பயிற்சி

திருச்சி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஓட்டுனர் பயிற்சி மையம் அமைக்கப்படும். திருச்சியில் அமைக்கப்படும் ஓட்டுனர் பயிற்சி மையத்தில், பொதுமக்களுக்கு ஓட்டுனர் பயிற்சியும், அரசுத்துறை மற்றும் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்களுக்கு புத்தாக்கப்பயிற்சியும் அளிக்கப்படும்.

பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரடியாக வராமலேயே ஓட்டுனர் உரிமத்தில் வாகன வகையினை ஒப்புவிப்பு செய்தல், போக்குவரத்து அல்லாத வாகன உரிமை மாற்றத்தை தெரிவித்தல் மற்றும் பதிவுச்சான்றில் தவணை கொள்முதல் விவரத்தை மேற்குறிப்பு செய்தல் ஆகிய சேவைகளை கணினி வழியாக பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய அலுவலகங்கள் உருவாக்கம்

பள்ளி வாகனங்களுக்கு முன்புறம் மற்றும் பின்புறம் கேமராவுடன், சென்சார் கருவி பொருத்தப்படும். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் உருவாக்கப்படும்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Next Story