சென்னை வாலிபர் போலீஸ் காவலில் இறந்த விவகாரம்: போலீசார் மீது கொலை வழக்கு முதல்-அமைச்சர் அறிவிப்பு


சென்னை வாலிபர் போலீஸ் காவலில் இறந்த விவகாரம்: போலீசார் மீது கொலை வழக்கு முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 May 2022 12:29 AM GMT (Updated: 7 May 2022 12:29 AM GMT)

சென்னை வாலிபர் போலீஸ் காவலில் இறந்தது தொடர்பாக போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முதியோர்களுக்கு பாதுகாப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை முருங்கத்தொழுவு உப்பிலிபாளையம் அருகில் 68 வயது முதியவர் கே.சி.துரைசாமி என்பவர் கொள்ளையர்களால் தலையில் தாக்கப்பட்டு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி தலையில் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். இந்த சம்பவத்தில் அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பான்மையான முதியவர்களின் மகனோ, மகளோ திருமணமாகி வெளி மாவட்டத்தில், வெளிநாடுகளில் வசிக்கும் சூழ்நிலை இருக்கிறது. எனவே பெரியவர்கள் தங்களது இறுதி காலத்தை சொந்த ஊரில் வாழ விரும்புகிறார்கள்.

அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை. ஆனால் சமீப காலமாக இதுபோன்று தனியாக வசிக்கும் முதியவர்களை குறி வைத்து தாக்கப்படுவதும், அவர்களது நகைகள் கொள்ளையடிக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் போன்ற செய்திகள் வருகிறது. இது வயதானவர்களிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முரண்பாடு

போலீஸ் விசாரணையின்போது விக்னேஷ் என்பவர் மரணம் அடைந்தது தொடர்பாக, நான் சட்டசபையில் கேள்வி எழுப்பினேன். அப்போது அதற்கு முதல்-அமைச்சர் விளக்கம் அளித்தார். ஆனால் சமீபத்தில் வெளியான விக்னேஷ் பிரேதபரிசோதனை அறிக்கையின்படி அவரது உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் மரணம் குறித்து முதல்-அமைச்சர் கடந்த மாதம் 26-ந் தேதி கொடுத்த தகவலுக்கும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் முரண்பாடு இருக்கிறது. எனவே இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, உடனடியாக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விசாரணை கைதி விக்னேஷ் மரணம்

இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் வாகன சோதனையின்போது, கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் வைத்திருந்ததையொட்டி, அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணையின் போது, உடல் நலம் குன்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார் என்பது குறித்து ஏற்கனவே இந்த அவையிலே சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து, எதிர்க்கட்சி தலைவர் மட்டுமல்ல; இந்த அவையில் உள்ள கட்சி தலைவர்களும், உறுப்பினர்களும் பேசியிருக்கிறார்கள்.

அப்போது நான் பதி்ல் அளித்து பேசிய நேரத்தில், விக்னேஷ் இறப்பு குறித்து “சந்தேக மரணம்” என முறைப்படி வழக்கு பதிவு செய்து, மாஜிஸ்திரேட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விக்னேஷினுடைய உடல் ஏப்ரல் 20-ந் தேதி அன்று மாஜிஸ்திரேட்டு முன்னிலையில், மருத்துவ குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது என்றும், இது வீடியோ மூலம் முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும், பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர், அன்றைய தினமே உறவினர்களிடம் முறைப்படி விக்னேஷினுடைய உடல் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரத்தை எல்லாம் நான் அன்றைக்கு தெரிவித்திருந்தேன்.

கொலை வழக்காக மாற்றம்

மேலும், இந்த வழக்கானது, சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் உள்ள நிலையில், தலைமைச் செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்க்காவல் படைக் காவலர் தீபக் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், காவல் துறை இயக்குனர் மேல் விசாரணைக்காக இவ்வழக்கினை 24-ந் தேதி அன்று சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

ஆகவே, விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக அரசு எடுத்து வருகிறது என்று நான் தெரிவித்திருக்கிறேன். தற்பொழுது கிடைத்துள்ள விக்னேஷ் பிரேத பரிசோதனை முடிவுகளின்படி, எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டதைப்போல, அவருடைய உடலில் 13 இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

இதனடிப்படையில், இன்றைக்கு இந்த வழக்கானது, கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவலர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டு, விசாரணையினைத் தொடர்ந்து நடத்திட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதை இந்த அவைக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈரோடு, திருப்பூர் சம்பவம்

அதேபோல், ஈரோடு மாவட்டம், சென்னிமலை காவல் நிலைய சரகம், உப்பிலிபாளையம் ஓடைக்காடு பகுதியில் துரைசாமி மற்றும் அவரது மனைவி ஜெயமணி ஆகியோர் ஏப்ரல் 30-ந் தேதி அவர்களது தோட்டத்து வீட்டின் வெளிப்பகுதியில் உறங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த இருவரையும் தாக்கிவிட்டு, அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை திருடிச் சென்றிருக்கிறார்கள்.

இச்சம்பவத்தில், காயமுற்ற துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மனைவி ஜெயமணி பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேபோன்று, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் காவல் நிலைய சரகம், தம்பிரெட்டிப்பாளையத்தில் பழனி சாமி மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள் அவர்களுக்கு சொந்தமான ரெட்டிப்பாளை யத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீட்டின் வெளியே உறங்கிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களைத் தாக்கி கொலை செய்து, வள்ளியம்மாள் அணிந்திருந்த சுமார் ஏழரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றிருக்கிறார்கள்.

அரசியலாக்க விரும்பவில்லை

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இதற்கென தனிப்படைகள் அமைக்கப்பட்டு இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு சம்பவங்கள் குறித்த முதல்கட்ட விசாரணையில், தாக்குதல் நடந்த விதம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட முறை ஒன்றுபோல் இருப்பதால், இந்த இரண்டு சம்பவங்களில் ஒரே குற்றக்கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிய வருகிறது.

இதுகுறித்து கோயம்புத்தூர் சரக காவல்துறை துணைத்தலைவர் தலைமையிலே, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

இதுபோன்ற குற்றச்சம்பவங்களைப் பொறுத்தவரையில், காவல் துறையின் சார்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டும், ஒருசில குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க இயலாத நிலை கடந்த காலங்களிலும் இருந்துள்ளது. இருந்தாலும், இதுகுறித்து காவல் துறை விசாரணை நடைபெற்று வருவதால், இதற்கு மேல் இதுபற்றி பேசி, நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆகவே, உரிய நடவடிக்கை நிச்சயமாக, விரைவில் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வெளிநடப்பு

இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘இந்த வழக்கு நேர்மையாக நடக்கும் வகையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தினோம். வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிடாத காரணத்தால் அவையில் இருந்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்' என்று கூறினார். அதனை தொடர்ந்து அ.தி. மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Next Story