சேலம்: அரசு பஸ் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து - டிரைவர் உயிரிழப்பு
ராசிபுரம் அருகே அரசு பஸ் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்து உள்ளார்.
ராசிபுரம்,
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜங்சன் பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ரகுமான் (வயது 46). இவர் சேலத்தில் பல்வேறு இடங்களில் மீன் கடைகளை வைத்து நடத்தி வருகிறார். அதற்காக நாகப்பட்டினத்திற்கு மீன் வாங்க சரக்கு ஆட்டோவில் அப்துல் ரகுமான் சென்றார்.
இதனிடையே நேற்று இரவு அங்கிருந்து சுமார் 800 கிலோ மீனுடன், சேலத்திற்கு சரக்கு ஆட்டோவில் புறப்பட்டார். ஆட்டோவை சேலம் கோரிமேட்டை சேர்ந்த பெருமாள் (56) ஓட்டிச் சென்றார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ராசிபுரம் அருகே உள்ள சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு ஆட்டோ சென்று கொண்டு இருந்தது.
அப்போது ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது முன்னால் சென்ற அரசு பஸ் மீது ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் டிரைவர் பெருமாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மீன் கடை உரிமையாளர் அப்துல் ரகுமான் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த அப்துல் ரகுமானை மீட்டு சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு சரக்கு ஆட்டோவில் சிக்கிக்கொண்டு இருந்த டிரைவர் பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story