உசிலம்பட்டி: கோவில் திருவிழாவில் சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள்
உசிலம்பட்டி அருகே உள்ள கட்டை காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தமிழக பாரம்பரிய போட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த எழுமலை பகுதியில் கட்டை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது ஆகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு தமிழக பாரம்பரிய போட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது.
இதில் 500 ஜல்லிக்கட்டு காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மாடுபிடி வீரர்கள் காளைகளை வீரமுடன் எதிர்கொண்டு வெற்றி பெற்றனர்.சிலர் மூர்க்கமான காளைகளின் ஆவேச தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். மேலும் சிலர் காளைகளை பிடிக்க முயற்சிக்கும் போது காயமடைந்தனர். அவர்களுக்கு சம்பவ இடத்தில் முகாமிட்டு இருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
இந்த வீரவிளையாட்டை காண சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். அக்னி வெயிலையும் பொருட்படுத்தாமல் போட்டிகளை ஆயிரங்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story