கோவை: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது..!
கோவை அருகே 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவை:
கோவையை சேர்ந்தவர் குப்புச்சாமி (வயது 63). இவரது வீட்டின் அருகே 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்தார். அதனை பார்த்த அவர் அந்த சிறுவனிடம் மிட்டாய் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்தார்.
இதனால் அந்த சிறுவனும் இவரது வீட்டுக்கு சென்றார். அப்போது குப்புச்சாமி அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுவன் அழுது கொண்டே அங்கிருந்து ஓட்டம் பிடித்து வீட்டுக்கு சென்றார்.
சிறுவன் அழுது கொண்டு வருவதை பார்த்த சிறுவனின் பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது குப்புச்சாமி பாலியல் தொல்லை கொடுத்ததை அவர் தெரிவித்தார்.
இதைகேட்டு அந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து சிறுவனின் பெற்றோர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.
சம்பவம் தொடர்பாக கட்டுப்பாட்டு அறை போலீசார் செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குப்புச்சாமியை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குப்புச்சாமி ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 8 வயது சிறுவனுக்கும் பாலியல் தொல்லையளித்ததும், மீண்டும் 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவனை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குப்புச்சாமியை கைது செய்தனர். அவரால் மேலும் வேறு யாராது பாதிக்கப்பட்டு உள்ளார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story